இளையராஜாவின் மாத்தி யோசி கணக்கு!
தமிழ் திரையிசை உலகில் தவிர்க்க முடியாத இரு ஆளுமைகள் எஸ்.பி.பி மற்றும் யேசுதாஸ். எண்பதுகளின் இசையுலகை கட்டியாண்ட இவ்விருவரின் குரலையும் பச்சிளங் குழந்தைகளும் இனம் புரிந்து கொள்ளும்.
இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவரல்லர். எஸ்.பி.பி தெலுங்கர். யேசுதாஸ் அவர்கள் மலையாளி. ஆனால் மொழிக்கு அப்பால் வடக்கத்திய எல்லை வரை கோலோச்சினார்கள் பன்னெடுங்காலமாக. காரணம் இசைக்கு மொழியேது?
திராவிட மொழிகளின் இலக்கணத்தையும் உணர்வையும் ஆழமாக உள்வாங்கி பாடும் பொழுது அவர்தம் குரலாலே உயிரூட்டும் மாய வித்தையை இருவரும் நன்கு அறிந்தவர்கள்.
உச்சரிப்பிலும் சரி, உணர்ச்சிகளிலும் சரி இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
ஆனால், இவர்கள் இருவரையும் உன்னிப்பாக கவனித்தால் ஓர் வித்தியாசம் புலப்படும். கேரள மண்ணின் கலாச்சாரமும் பண்பாடுகளும் பெரும்பாலும் சற்றே மெல்லிய சோகத்துடனே இருப்பதுனாலோ என்னவோ யேசுதாஸின் குரலும் மெல்லியதாகவே ஒலிக்கும்.
அவர் பாடிய ஐயப்பன் பாடலான ‘ஹரிவராசனம்’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘ராமனின் மோகனம்’, ‘உறவுகள் தொடர்கதை’, ‘வெண்ணிலாவின் தேரில் ஏறி’ என கிட்டத்தட்ட அவர் பாடிய அத்தனை பாடல்களுமே ஓர் சோக உணர்வை பாடல் முழுவதும் சுமந்து கொண்டேயிருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் ‘Blues’ எனும் பெயரால் பிரித்து குறிப்பிடுவர். அதாவது இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால்,
நாம் கேட்கும் அனைத்து ஆன்மிக பாடல்களுமே இந்த ரகத்தையே சாரும்.நமக்கு பரிச்சயமான ‘கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்’ பாடலை சொல்லலாம். பாடும் போதே ஒரு வித மென்சோகத்தை மனதில் தாங்கியபடி இறைவனின் கருணையை நாடுவதே பாடலின் நோக்கம்.
அதே போல் காதல் பாடலை எடுத்து கொண்டால், ‘என் இனிய பொன் நிலாவே.. பொன் நிலவில் என் கனாவே’ என்ற பாடல். இதிலும் கதாநாயகன் கதாநாயகியிடம் ஒருவித மென்சோகத்தோடும் காதல் உறுத்தலோடும் பிரிந்து விடுவோமா , சேர்வோமா என்ற ஏக்கத்துடன் காதலை வெளிப்படுத்தும் தீர்க்கத்தை அறிய முடியும்.
இப்படிப்பட் ‘Blues’ ரக பாடல்களில் யேசுதாஸ் பலே கில்லாடி. அசால்ட்டாக திரையில் மாயவிசையை தன் குரலினால் ஏற்படுத்தக்கூடியவர்.
எஸ்பிபி அவர்களின் குரல் சற்றே துள்ளலான ஆர்ப்பாட்டமான உறுதியான குரல். இது அவரின் ரஜினிக்காக பாடிய முகப்பு பாடல்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ‘ஒருவன் ஒருவன் முதலாளி’, ‘வந்தேன்டா பால்காரன்’, ‘காட்டுக்குயிலு, ‘ வெற்றி நிச்சயம்’ என நீள்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது இசைஞானி.
எஸ்பிபி தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது அவரும் யேசுதாஸ் போல மெல்லிய குரல் மூலமாக மட்டுமே பாடி வந்தார். அவருடைய குரல் துள்ளலாக இருந்தாலும் அவருக்கு கிடைத்த பாடல்கள் அப்படி.
‘ஆயிரம் நிலவே வா’, ‘யமுன நதி’, ‘கடவுள் அமைத்து வைத்த’, ‘சங்கீதம் எப்போதும் சுகமானது’ என போய்க் கொண்டிருந்த நேரத்தில்,
இளையராஜாவின் மந்திர எரிபொருளால் துள்ளி எழுகிறார். முள்ளும் மலரும் படத்தில் எப்போதும் இல்லாமல் மாற்றி யோசித்தார். எப்போதும் சோக பாடல்களை பாடும் யேசுதாஸ் இம்முறை ‘செந்தாளம் பூவில்’ எனும் மெல்லிய கீதம். எஸ்பிபி அரங்கையே அதிர வைத்த ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்’ பாடலை பாடினார். இரண்டமுமே அற்புதமான பாடல்கள்.

இதன் விளைவு எஸ்பிபியின் மந்திரகுரல் தெரிய ஆரம்பித்தது. அவரின் குரல் இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை இசைஞானி உடைத்தார். அதனால்தான் அவர் இசைஞானி.
இந்த பாடலை தொடர்ந்து தன் வழக்கமான பாணியான மெல்லிய கீதங்களுடன் சேர்த்து ‘மை நேம் இஸ் பில்லா’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’,’ராஜா கைய வெச்சா’ , ‘ராஜாதி ராஜா’மாதிரியான ஆர்ப்பாட்டமான பல பாடல்களைக்கு சொந்தக்காரரானார் நம் எஸ்பிபி.
ஒருவனின் திறமையை அவனுக்கே தெரியாமல் உள்வாங்கி கொண்டு அதை வேறொரு கோணத்தில் மெருகேற்றுவதெல்லாம் கோடிகளில் ஒருவரால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நண்பராக இளையராஜா கிடைத்தமைக்கு எஸ்பிபி காலம் கடந்தும் இசைஞானியை நினைத்து கொள்வார்.
அதன் பிறகு துள்ளல், சோகம், சாந்தம், சாத்வீகம் என தொட்ட இடமெல்லாம் ஜொலித்தார்.
அப்படிப்பட்ட அசாத்திய கலைஞனை கொஞ்சம் கூட இசை ரசனை இல்லாத உயிரினமான கொரோனா எடுத்துக்கொண்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக