எளிய மக்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. அதே போல் தான் அவர்களின் நம்பிக்கையை உடைப்பதும்.
மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று நகரங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த சுமார் ஒரு மாத காலம் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் உட்பட நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களே கூட அலட்சியமாக நடந்து கொண்டதை பார்த்தோம்.
மொட்டை மாடியில் நின்று கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது, மீம்ஸ் போடுவது, கொரோனாவை வைத்து ஒரு முமு நீள காமெடி திரைப்படம் எடுக்கும் அளவிற்கு இளைஞர்கள் தங்கள் எல்லையற்ற சித்தரிப்புகளை செய்தனர்.கொரோனாவையும் கிள்ளுக் கீரையாக நினைத்ததற்கு மீம்ஸ் ஒரு முக்கிய காரணம்.
பிறகு நகரத்தார் சற்று சுதாரித்தனர். வீட்டிற்குள் முடங்கினர்.
ஆனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அவர்களின் வெள்ளந்தி மனசு போலவே இருந்து வந்தனர். அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். கிராம மக்கள் அவ்வளவு எளிதில் அடுத்தவரிடம் அடி பணிய மாட்டார்கள். ஒரு விதமான வீம்பு குணம் அவர்களை உரசி பார்க்கும் அவ்வப்போது.அதே போல் நகர மக்களுக்கு அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. விளையாட்டு ஆரம்பித்து டேட்டிங், திருமணம், அலுவல் பணி, மளிகை வாங்கல், வெட்டி அரட்டை என சகலமும்.
திண்ணை பேச்சும், டீ கடை அரசியலும், வீட்டு முற்றத்தில் தாயமும், கோயில் மரத்திடம் மௌன உரையாடலும்,அக்கம்பக்கத்தினரின் உபசரிப்பும் என உறவுகளின் வழி கதை சொல்லியாய் வாழும் கிராமத்தாருக்கு ஊரடங்கு ஒரு பெரிய இடி.
ஆனால், கடந்த சில தினங்களாக மக்கள் மனநிலையில் ஏகோபித்த மாற்றங்கள்.
நகரத்தார் வழக்கம்போல் ஆன்லைனில் தங்களின் சுயசார்பு வாழ்க்கையை எந்தவித சிரமமுமின்றி ஓட்டி வருகின்றனர்.
சிறகை இழந்த தாய் பச்சு, தான் சேகரித்த அரிசி பருக்கையை தன் குஞ்சுகளுக்கு எப்படி பறந்து போய் கொடுப்பது என தடுமாறும் அதே மனவோட்டத்துடன் கிராம மக்கள் துன்புற்றனர்.
அதன் விளைவாக அச்சமும், அக்கறையும் பட்டித்தொட்டியிலும் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது.
இதை ஷேர் செய்தால் இன்று இரவுக்குள் நல்லது நடக்கும் போன்ற சிறுசிறு விளையாட்டுதனங்களுடன் இருந்தவர்கள் மெல்ல அறிவியலுடன் உரையாட ஆரம்பித்துள்ளனர்.
எளிய மக்களின் பிடிவாதமான ஆனால் அழகான சிறுசிறு நம்பிக்கைகளை இன்று கொரோனா அசைத்து பார்த்திருக்கிறது!
இந்த அசைவு கூடிய விரைவில் நன்மை பயக்கும்!
கொரோனாவுக்கு தெரியுமோ மண்ணின் வாசனையும், மக்களின் மனவோட்டமும்?



கருத்துகள்
கருத்துரையிடுக