தமிழ்நாட்டில் , விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த சில வருடங்களாக ஆண்டுதோறும் பலதரப்பட்ட மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை இந்து முன்னணியினர் முன்நின்று பல்லாயிரக்கணக்கான நகரங்களிலும் கிராமங்களிலும் நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி ஏற்று நடத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழ்நாட்டில் இந்துத்துவ கொள்கைகளை நிலைநிறுத்தவும், இந்துக்களை ஒரே போர்வையின் கீழ் ஒன்றிணைக்கவும், சங்பரிவார் கூட்டத்தின் சனாதன கோட்பாடுகளை நிறுவவுமே தமிழர்களின் திருவிழாவாக அடையாளப்படுத்தப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி - மராத்தியர்களின் திருவிழா!
விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த வளர்பிறை நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது.சதுர் எனும் வடமொழிச் சொல் நான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் நான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.இவ்விழா விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி திருவிழா 1980 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் அவ்வளவு சீரும் சிறப்புமாக கொண்டாடபட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. மராத்திய மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி அவர்களின் காலகட்டத்தில் இவ்விழாவானது தேசிய விழாவாகவும் கலாச்சார திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில், பூனா நகரில் வசித்துவந்த கொங்கணஸ்த் பிராமணர்களால் கொண்டாடப்பட்டு வந்த விழா காலப்போக்கில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.கொங்கணஸ்த் பிராமணர் என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழிகளாக கொண்ட் பஞ்ச திராவிடம் பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் ஆவர். அதேபோல் பேஷ்வாக்களின் குடும்ப கடவுளாகவும் விநாயகர் திகழ்ந்தார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், பால கங்காதர திலகர்(கொங்கணஸ்த் பிராமணர்) , இத்திருவிழாவை நாடு முழுவதிலும் உள்ள இந்து மக்கள் கொண்டாடும்படி ஆக்கினார். அன்றைய காலகட்டத்தில், உயர் சாதியினரும் கீழ் சாதியினரும் கொண்டாடும் தெய்வமாக விநாயகர் இருந்த காரணத்தால், விநாயகரை பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோர் இடையே இருந்த வேறுபாடுகளை களைய கடவுளை வைத்து விழா எடுத்தார். இதன் மூலம் இந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக தேசிய ஒருமைப்பாட்டை காப்பதற்காக, திலகருடன் சேர்ந்து அன்றைய இந்துத்துவ அமைப்புகளும் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடத்திலும் விநாயகரை கொண்டு சேர்த்தனர்.
இந்தியாவின் இரும்பு மனிதரான திலகர், நாட்டை இணைப்பதில் பெரும் பங்காற்றினார் என்பது வரலாற்றுக்கு தெரியும். அதேபோல் விநாயகரை தேசிய அளவில் பெருமைப்படுத்தியது அதே இரும்பு மனிதர்.
இதன் தொடர்ச்சியாக, எல்லாக் கடவுள்களுக்கும் முதன்மையான கடவுளாகவும் வியாபாரிகளின் கடவுளாகவும் விநாயகர் மாறினார்.
தமிழ் மண்ணில் விநாயகர் வழிபாடு!
இன்றைய தினத்தில் நம் மாநிலத்தில், ஒரு குழந்தை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால் பிள்ளையார் சுழி இடுகிறது.அதேபோல் வணிகம் செய்யும் அண்ணாச்சிகளும் செட்டியார்களும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தான் புதிய காரியத்தை ஆரம்பிக்கின்றனர்.அதேபோல், புதிய வீடு,அலுவலகம் கட்டியவர்கள் ‘கணபதி ஹோமம்’ செய்த பின்பே குடியேறுகின்றனர்.இவை அனைத்தும் நம் தமிழ் சமூகத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய வழிபாட்டு முறைகள்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று முதன்முதலாக சிலை வைத்து அதை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு 1980களில் சென்னையில் நடைபெற்றது. அதற்கு முன்னர் அப்படிப்பட்ட பழக்கம் தமிழகத்தில் இருந்ததாக தெரியவில்லை. இந்து முன்னணியின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சென்னையிலுள்ள மாம்பலம் பகுதியில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வருடங்களில் திருவல்லிக்கேணி,மயிலாப்பூர் முதலிய இடங்களில் நடத்தப்பட்டது.நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும் வேலையினை இந்து முன்னணி கட்சியின் நிர்வாகிகள் கையிலெடுத்து அதை ஊர்ஊராக செய்து வந்தனர். பல்வேறு இடங்களில் இதன்காரணமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது.
1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசியலில், இந்துத்துவ கொள்கைகளும் பிராமணியமும் மெல்ல மெல்ல தழைத்தோங்கிய காலகட்டம். அதை பயன்படுத்திக் கொண்ட இந்து முன்னணியினர் மட்டும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் நகரங்களில் 10 அடி முதல் 30 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலை செய்து அதை கடலில் அல்லது ஆற்றில் கரைக்க தொடங்கினர்.
பெரும்பாலும் இந்த விநாயகர் சிலைகள் மண்ணால் செய்யப்பட்டவையே.ஆனால் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கனவாக இருக்கும் காரணத்தினாலும் எளிதில் இடமாற்றம் செய்ய முடியாத காரணத்தாலும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் எளிதில் பெரிய பெரிய சிலைகளை செய்து இடமாற்றம் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு பிறகு அந்தந்த ஊர்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கிட்டதட்ட பத்து நாட்களுக்கு சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகரில் மட்டும் 1980களில் சில நூறு சிலைகள் அழைக்கப்பட்டனர். அதுவே 90களில் சுமார் 5000ஐ தொட்டது. தொண்ணூறுகளின் இறுதியில் இது பல்லாயிரக்கணக்கில் தாண்டியது.
சில இடங்களில் குழந்தை வடிவிலான விநாயகர் சிலைகள், யானை முகத்துடன் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு அதற்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒருசில கையில் துப்பாக்கி ஏந்திய விநாயகர் சிலையும், ஆக்ரோஷமான நிலையில் உள்ள விநாயகர் சிலைகளும் செய்யப்படுகின்றன. இதனை கார்கில் விநாயகர் என கூறுகின்றனர். தேசியவாதத்தின் உச்சபட்ச நிலையான வன்முறை போக்கையே இத்தகைய விநாயகர் சிலைகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இதனை பாஜக அரசு அந்தந்த மாநில கட்சிகளுடன் இணைந்து சாதுரியமாக வருடாவருடம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில், வணிகத்தில் அதிகம் ஈடுபடும் செட்டியார், நாடார் போன்றோர் இந்த திருவிழாவை விமர்சையாக கொண்டாடுகின்றனர். இதற்கு காரணம் வணிகத்தில் ஒரு காரியத்தை செய்வதற்கு விநாயகரின் வழிபாட்டை தொடக்கமாக கருதுவதே. சங்க இலக்கியங்களில் விநாயகரை பற்றிய குறிப்புகள் எங்கும் இல்லை. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு விநாயகர் தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகிறார். அதனால்,பண்டைய தமிழர்கள் விநாயகரை வழிபட்டார்கள் என்பது வெறும் புரட்டு.
சாதி சமயமற்ற இந்துக்களின் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தி தோன்றினாலும், சில அரசியல் கட்சிகளும்,இந்து அமைப்புகளும் தங்களின் கொள்கை அரசியலுக்காக பல்வேறு ஊர்களில் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அமைதியாக கொண்டாட வேண்டிய இடங்களில் மத உணர்வுகளை ஊட்டி வன்முறைக்கு வழிவகுக்கும் படி நடந்து கொள்வது பகுத்தறிவு மண்ணான தமிழ் மண்ணிற்கு ஆபத்தானது.
விநாயகர் சதுர்த்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஊரின் எல்லையில் இருக்கும் சுடலை கருப்பனுக்கும், ஐயனாருக்கும், முனியப்பனுக்கும், மாரியம்மனுக்கும் கொடுத்து தமிழ் மண்ணின் சிறு தெய்வங்களுக்கும் இந்து மக்கள் கட்சியும், இந்து முன்னணியினரும் விழா எடுத்தால் சமத்துவம் பிறக்கும்.
சமத்துவம் வெல்லட்டும். மனிதம் நிலைக்கட்டும்!



கருத்துகள்
கருத்துரையிடுக