இந்திய அரசின் கூட்டாட்சி தத்துவம் - பகுதி 1
இந்திய குடியரசு சமீபகாலமாக, ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே மொழி என அனைத்திலும் ஒற்றை சாராம்சத்தை கையிலெடுக்கும் நிலையை நம்மால் பார்க்க முடிகிறது.
உதாரணத்திற்கு மருத்துவ படிப்பிற்கு பல மாநிலங்களில் உள்ள தேர்வுகளை விட்டு நாட்டிற்கே ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்று நீட் எனும் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதேபோல் இந்தியா முழுமைக்கும் இந்தி மொழியை பொதுவானது,அதை அனைத்து மாநில மக்களும் கற்கவேண்டும் ஹிந்தி மொழியில் உரையாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் மறைமுகமாகவும் சில நேரங்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதேபோல், கடந்த வாரம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டது பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மாநில உரிமைகள் பறிக்கப் பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில உரிமைகள் பறிக்கப் பட்டதாக கூறப்பட்டதன் காரணம், விவசாயம் மாநில பட்டியலில் உள்ளது. எனவே விவசாயம் மற்றும் விவசாயி சார்ந்த வேளாண் மசோதாவை எப்படி மத்திய அரசு தாக்கல் செய்ய இயலும் என்றும் இதை மாநில அரசுகள் அந்தந்த மாநில விவசாயத்தின் நடைமுறைக்கு ஏற்றார்போல மசோதாக்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்றும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
உண்மையில் இந்திய குடியரசு எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி (federal system) நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும்.இந்திய அரசியலமைப்பு சட்டம் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் ஆன இங்கிலாந்து, அமெரிக்கா ,கனடா ஆகிய நாடுகளில் அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து சில கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு அதை மூலமாக வைத்துக்கொண்டு நம் நாட்டிற்கு ஏற்ப நம் அரசியலமைப்பை உருவாக்கினர்.
அப்படி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் பகுதி 11 இந்திய கூட்டாட்சி தத்துவத்தை மிக அழகாக வலியுறுத்துகிறது.எந்தெந்த துறைகள் மத்திய அரசின் கீழ் வர வேண்டும்,எந்தெந்த துறைகள் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வர வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் கூட்டாக எந்தெந்த துறைகளை வழிநடத்த வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு பகுதி-11 விடை அளிக்கிறது.
சட்டமன்ற அதிகாரத்தில் கூட்டாட்சி பங்கு:
சட்டமன்ற அதிகாரம்(Legistative Powers) இந்திய குடியரசில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. ஒன்றிய பட்டியல்
2. மாநிலப் பட்டியல்
3. ஒருமுக பட்டியல்
ஒன்றிய பட்டியல்:
இந்திய நாடாளுமன்றத்திற்கானத் தனிப்பட்ட சட்டவாக்க அதிகாரங்கள்,இந்திய அரசமைப்பின் ஏழாம் பட்டிகையில் ஒன்றியப் பட்டியல் (Union List) அல்லது பட்டியல் ஒன்றில் (List-I) தரப்பட்டுள்ளன. இதில் நூறு உருப்படிகள் காணப்படுகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு
ஆயுத படைகள்,கடற்படை,இராணுவம்
அணு ஆற்றல்
கனிம வளங்கள்
வெளிநாட்டு விவகாரங்கள்
ஐக்கிய நாடுகளின் அமைப்பு
போர் மற்றும் அமைதி
குடியுரிமை
ரயில்வே
தேசிய நெடுஞ்சாலைகள்
ஒன்றிய பட்டியலில் உள்ள மீதமுள்ள துறைகளை காண, https://en.wikipedia.org/wiki/Union_List
மாநிலப் பட்டியல்:
மாநில அரசின் அதிகாரவரம்புகள் குறித்து மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் கீழ் துறைகளின் அதிகாரங்கள் முடிவுகளை ஒன்றிய அரசோ திருத்தம் கொண்டு வர முடியாது.இன்றைய தேதியில் மாநிலப் பட்டியலில் 59 உருப்படிகள் உள்ளன
1.சட்டம் ஒழுங்கு (இந்திய கப்பற்படை, விமானப்படை அல்லாது).
2.காவல்துறை
3.உயர் நீதிமன்றங்களில் பணிபுரிவோர்
4. சிறைத்துறை
5.மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மன்றம்
6.பொது சுகாதாரம்
7.வழிபாட்டுத் தலங்கள்
8.மது விற்பனை
9.ஊனமுற்றோர் நிவாரணமும் வேலைவாய்ப்பும்
10. சுடுகாடு, இடுகாடு
11.கல்வி (மாநிலப்பட்டியலில் இருந்ததை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது). 12.நூலகம், அருங்காட்சியகம் அல்லது அருங்காட்சியகம் போன்று மாநில அரசின் நிதியில் இயங்கும் பிற காட்சிச் சாலைகள்
13.சாலைத் தொடர்பு (சாலை, பாலங்கள், படகு சவாரி, டிராம், இழுவை ஊர்தி, உள்நாட்டு கப்பல் போக்குவரத்து)
14. உழவு. உழவு ஆராய்ச்சி மற்றும் படிப்பு, பூச்சிக் கொல்லி மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்டவை கால்நடைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, மேம்பாடு, கால்நடை நோய்களைக் கண்டறிந்து ஆராய்தல் உள்ளிட்டவை
15.குளங்கள்.
ஏனைய மாநில பட்டியலில் உள்ள துறைகளை காண, https://en.wikipedia.org/wiki/State_List
ஒருமுகப் பட்டியல்:
இந்திய ஒன்றிய அரசும், இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் இணைந்து அதிகாரப்பகிர்வு வழிநடத்தக்கூடிய குறைகளை ஒருமுகப் பட்டியலில் தொகுத்துள்ளனர். இதில் 52 துறைகள் உள்ளன.
குற்றவியல் சட்டம்
குற்றவியல் நடைமுறை
திவால்நிலை மற்றும் திவால்தன்மை
சிவில் நடைமுறை
நீதிமன்ற அவமதிப்பு
மக்கள் தொகை கட்டுப்பாடு
மருந்து கட்டுப்பாடு
தொழிற்சங்கம்
கல்வி
இப்பட்டியலில் உள்ள யானையை துறைகளை காண, https://en.wikipedia.org/wiki/Concurrent_List
ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல், ஒருமுக பட்டியல் - இம்மூன்று பட்டியல்களை தாண்டிய சில துறைகளை மீதமுள்ள பட்டியலாக, இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தின் கீழ் வரும் படி அமைத்துள்ளனர்.
அடுத்து வரும் பதிவுகளில், நிர்வாக சக்தி, விதி சக்தி ஆகியவற்றின் இந்திய கூட்டாட்சி தத்துவத்தை பார்க்கலாம்.



கருத்துகள்
கருத்துரையிடுக