மக்களுக்கான அரசியல் மக்களிடம் இருந்தே தொடங்குகிறது. இந்திய அரசியல்
வரலாற்றில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே பெரும்பாலான அரசியல்வாதிகள்
தம் அரசியல் பயணத்தை மக்களிடமிருந்து தொடங்கினர். அரசியலில் ஈடுபடாத
சமூகத்திற்கான பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பெரும் தலைவர்களான காந்தி, பெரியார்
முதலியோரும் மக்கள் பிரச்சினைகளை மக்களோடு மக்களாக கலந்து புரிந்து கொண்டனர்.
அதன் நீட்சியாக சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசியல் களத்தில் பல்வேறு ஆளுமைகள் தங்களுடைய மக்களுக்கான மரபை விட்டுச் சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட தலைவர்களிடமிருந்து அரசியலைக் கற்றுக் கொண்ட பொது மக்களும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக தெருவில் இறங்கிப் போராடும் குணத்தை அன்றிலிருந்தே பெற்றவர்களாக உள்ளனர்.ஆனால் சில வருடங்களாக, அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரையும் சமூக விரோதி போல சித்தரிக்கும் தவறான மனநிலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை அரசாங்கம் ஆதரித்தும் வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
சில தினங்களுக்கு முன், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்னும் நகரத்தில் பாலியல் வன்புணர்வு காரணமாக கொடூரமான முறையில் 19 வயது இளம்பெண் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்த இளம்பெண், நாக்கு அறுபட்டு, முதுகெலும்பு
சிதைந்து 15 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்காக போராடி இறுதியில் உயிரிழந்தார்.இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அவர்கள், பிரியங்கா காந்தியுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக ஹத்ராஸ் சென்ற போது, காவல் துறை பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து சர்வாதிகாரப் போக்கை அரங்கேற்றியது.
எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அடக்குமுறைகளை பலதரப்பட்ட மக்களும்,
ஏனைய அரசியல் கட்சிகளும் எதிர்த்தனர்.இதையடுத்து, இன்று மீண்டும் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற போது, காவல்துறை பிரியங்கா காந்தியின் சட்டையை இழுத்து அதிகாரத்தின் கோரமுகத்தை காட்டினர்.
இதற்கெல்லாம் அசராத பிரியங்கா காந்தி, தொடர்ந்து முன்னேறி வந்தார். திடீரென்று
யாரும் எதிர்பாராத வேளையில் காவலர்கள் கட்சித் தொண்டர்கள் மீது தடியடி நடத்த
முற்பட்டனர். உடனே சுதாரித்த பிரியங்கா காந்தி காவலர்களை எதிர்த்து துணிச்சலாக
நின்றது கட்சித் தொண்டர்களை நெகிழ வைத்தது. பெண்ணாக நூற்றுக்கணக்கான காவலர்களை எதிர்த்து நின்ற அந்த ஒரு கணம் பிரியங்கா காந்தியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்கும்.
அரசியலில் இணைவதற்கு முன்னைய காலங்களில், தன் தாயாரான சோனியா காந்தியின் அரசியல் பிரச்சாரத்திற்காக அமேதி தொகுதியில் பட்டி தொட்டி எங்கும் சென்று மக்களிடம் உரையாடினார். மக்களின் நன்மதிப்பையும் பெற்றார். அதனோடு நின்றுவிடாமல், மக்களின் பிரச்சினைகளுக்காக உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, தன்னை முழுநேர அரசியலில் ஈடுபடுத்திக்கொள்ள போவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரபிரதேச செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அதன் நீட்சியாக இன்று, தன் பொறுப்பில் உள்ள ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சனைக்காக துணிச்சலுடன் மக்களோடு இணைந்துள்ளார்.
வெறுமனே கட்சிப் பதவியை வாங்கிக்கொண்டு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல் சிக்கலான நேரங்களில் கட்சியை கைவிட்டு மாற்றுக்கட்சிக்கு தாவும் மனநிலையில் உள்ள அரசியல்வாதிகள் அகில இந்திய காங்கிரசில் ஏராளம்.
அப்படிப்பட்ட சூழலில், பிரியங்கா காந்தியின் இன்றைய செயல்பாடு ஒட்டுமொத்த காங்கிரசாரின் நம்பிக்கைக்கு பாத்திரமான செயலாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய சமூகத்திற்கான போராட்டங்கள் ஒன்றிரண்டோடு நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்தால், மக்களின் நன்மதிப்பை பெறலாம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட, ஒருங்கிணைப்போடு நின்று மத்தியில் ஆளும் அரசின் அவலங்களை தட்டிக்கேட்கும் துணிச்சல் அதிகம் இல்லாத நிலையே காணப்படுகிறது .
ஒரு துணிச்சலான பெண்ணாக பிரியங்கா காந்தி இன்று செய்து காட்டிய சம்பவம்,
இருளை அணைக்க வந்த நம்பிக்கை ஒளியாகவே பார்க்கப்படுகிறது.ஒரு பெண்ணாக, ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து களமிறங்கியது பெண்ணியத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக